மதுரையில் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த திருடன், ஆற அமர இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிம்மக்கல்லில் இருக்கும் பேச்சியம்மன் கோயிலுக்குள், கடந்த செவ்வாய்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் சுவர் ஏறிக்குதித்து நுழைந்த திருடன், நீண்டநேரமாக உள்கதவின் பூட்டை உடைக்க முடியாததால் சோர்வடைந்து உட்கார்ந்து விட்டார். அதன் பின்னர் அங்கிருந்த குடத்தில் உள்ள தண்ணீரைக் குடித்த அந்த திருடன் மீண்டும் சிரமப்பட்டு கதவை திறக்க முயன்றார். ஆனால் அவரால் கதவை திறக்க முடியவில்லை. அதன் பின்னர் மற்றொரு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் அங்கிருந்த 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் குத்து விளக்கை திருடியுள்ளார்.
களவு போன ஐம்பொன் சிலைகள் 15 கிலோ எடை கொண்டவை. அதே போல் குத்துவிளக்கின் எடை 35 கிலோ. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட 4 மணி நேரம் கோயிலுக்குள் சுற்றிய திருடன் புறப்படுவதற்கு முன் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளார். ஆனால் அவர் உடைப்பதற்கு முன்னரே அத்தனையும் பதிவாகிவிட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருடனை தேடி வருகின்றனர்.