சென்னையில் கோகைன்,ஹெராயின் போன்ற போதைப்பொருள்கல் கடத்திய நைஜீரிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த இ.சி.ஆர் நீலாங்கரை கடற்கரை பகுதியில் நைஜிரியா நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிவாதாகவும் போதைப் பொருட்களை விற்க முயற்சித்ததாக அந்தப் பகுதிவாசிகள் காவல்துறைக்கு ரகசிய தகவல் அளித்தனர். அந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு வந்த சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த இரு தினங்களாக இ.சி.ஆர் கடற்பகுதியில் ரகசிய ரோந்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் பை மாட்டிக்கொண்டு புதுச்சேரி பதிவு எண் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் சுற்றிதிரிந்த நைஜிரிய வாலிபரை மடக்கி பிடித்து விசாரனை செய்தனர். அதில் அவர் பெயர் காட்வி சாக்கோ (38) என்பதும், சென்னை முதல் புதுச்சேரி வரை கடலோர பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து கோகைன்,ஹெராயின்,கஞ்சா விற்றுவந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 130 கிராம் கோகைன், 7 கிராம் ஹெராயின், 1200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த போதைப்பொருள்களின் மதிப்பு 6 லட்சம் எனவும் அப்போது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்வின் சாக்கோவை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் துரிதமாக செயல்பட்ட டி.எஸ்.பி புருஷோத்தமன் தலைமையிலான சென்னை போதைப் பொருள் தடுப்பு போலீசாரை உயர் காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.