தாம்பரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தில் வைத்து தாயை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் தடம் எண் 166 மாநகரப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் நிறைய பேர் உட்காந்திருந்தனர். அப்போது திடீரென அரிவாளுடன் வந்த நபர் ஒருவர் முத்தம்மாள்(77) என்ற மூதாட்டியை வெட்டிக்கொலை செய்தார். மேலும் மூதாட்டியுடன் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணின் மீது அந்த நபர் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.
இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலைசெய்யப்பட்ட முத்தம்மாள் கொலைசெய்த தேவராஜின்(53) தாயார் என தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த விஜயலட்சுமி(55) தேவராஜின் சகோதரி எனவும் சொத்து தகராறு காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.