குற்றம்

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரத்தில் தாயும் மகனும் கைது

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரத்தில் தாயும் மகனும் கைது

webteam

கல்யாண் ஜூவல்லரி நிறுவனத்தின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான பைரோஸின் தாயும், சகோதரரும் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 7ஆம் தேதி கேரளாவில் இருந்து கோவை கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு காரில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 350 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. 

அப்போது கொள்ளையர்கள் கடத்தி சென்ற கல்யாண் ஜூவல்லரியின் கார் மீட்கப்பட்டது. காரில் இருந்து நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை காவல்துறையினர் தேடிவந்தனர். 

இந்தச் சுழலில் வழுக்குபாறை என்ற கிராமத்தின் கார் ஒன்று தனியாக நிற்பதாக வந்த தகவலையடுத்து, விரைந்த காவல்துறை காரை கைபற்றி விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னையை சேர்ந்த ஒருவரின் பெயரில் அந்த கார் இருக்கவே, அந்த நபரை தனிப்படை போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் காரை விற்று பலமாதங்கள் ஆகிவிட்டது என விசாரணையின் போது தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து காரை வாங்கிய நபரை காவல்துறையினர் தொடர்பு கொண்ட போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூரைச் சேர்ந்த பைரோஸ் என்பவர் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. 

இதனைத்தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பைரோஸ், நகைகளை தனது தாய் மற்றும் சகோதரரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று  திருப்பதி ரயில்நிலையம் அருகே வைத்து ‌பைரோஸின் தாய் சமா, அவரது சகோதரர் அகமது சலீம் ஆகியோரை கைது செய்துள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த பைரோஸ் தனது நண்பர்களுடன் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.