குற்றம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: கோவைக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஐவரிடமும் என்.ஐ.ஏ. விசாரணை!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: கோவைக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஐவரிடமும் என்.ஐ.ஏ. விசாரணை!

webteam

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை நேரடியாக கோவைக்கு அழைத்து சென்று அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜெமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெமேஷா முபினின் நண்பர்களான இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, ஐந்து பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து  விசாரணையில் ஈடுபட்டனர். உக்கடம், கோட்டைமேடு, பிலால் எஸ்டேட், புல்லுக்காடு, ஜி.எம்.நகர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளில் வைத்து அவர்களில் சில கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொண்டு அவர்களை அழைத்து சென்றனர்.

முன்னதாக, இந்த 5 பேரை கோவை காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இவர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரனை நடத்தவும் திட்டமிடபட்டுள்ளனர். வாக்குமூலத்தில், இவர்கள் தெரிவித்த இடங்களில் அழைத்து சென்று விசாரணை நடைபெற உள்ளது.