குற்றம்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: மாணவியின் தந்தை கைது

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: மாணவியின் தந்தை கைது

webteam

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்த விவகாரத்தில் மாணவியின் தந்தை பாலசந்திரன் கைது செய்யப்பட்டார்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷா என்பவர் கடந்த டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் போலியாக சான்றிதழ் வழங்கியதை உறுதி செய்த பின்னர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்று அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த மாணவியின் தந்தை, பல் மருத்துவர் பாலசந்திரன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரை ஏற்கெனவே 2 முறை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாக இருந்த மாணவி தீக்‌ஷா, அவருடைய தந்தை பாலசந்திரனை பிடிக்க காவலர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், மாணவியின் தந்தை பாலச்சந்திரன் பெங்களூருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெங்களூரு விரைந்து சென்ற போலீசார், பாலச்சந்திரனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் போலி சான்றிதழ் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. 

தொடர்ந்து, பாலசந்திரனை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரை ஜனவரி 11 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட் ஆணை பிறப்பித்தார்.

மேலும் ஜாமின் கோரி பாலச்சந்திரன் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி அவரது மனு நிராகரிக்கப்பட்டது.