குற்றம்

சேலம்: திமுக கவுன்சிலரை வெட்டிக் கொல்ல முயற்சி - 4 பேர் கைது

சேலம்: திமுக கவுன்சிலரை வெட்டிக் கொல்ல முயற்சி - 4 பேர் கைது

webteam

மேட்டூர் நகராட்சியில் திமுக கவுன்சிலரை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி 14-வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் கடந்த 30 ஆம் தேதி நகராட்சியில் நடைபெற இருந்த நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த இரண்டு பேர் அவரை வீச்சருவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்ட மேட்டூர் காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடாஜலத்தின் மனைவியும் 1வது வார்டு கவுன்சிலருமான உமா மகேஸ்வரி, மேட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் மேட்டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். இதில், இவர்கள் 4 பேரும் கடந்த 30 ஆம் தேதி வெங்கடாஜலத்தை வெட்டிவிட்டு தப்பியவர்கள் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது பிரபு, மணிவாசகம், ஜெயக்குமார், ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் திமுக கவுன்சிலர் வெங்கடாஜலத்தை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை முயற்சி சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கூலிப்படையினர் எடப்பாடியை சேர்ந்த ரமேஷ், சச்சின்குமார், மேட்டூர் அருகே நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் மகேஷ், மதுரையை சேர்ந்த பாண்டி, ஜீவா, திக்குவாயன் ஆகிய ஆறு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்... கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல ரவுடி மாதேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாதேஷின் தம்பி பிரபு தனது அண்ணனை கொலை செய்த திமுக கவுன்சிலர் வெங்கடாஜலத்தை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்ததாகவும், இதற்காக மூன்று மாதமாக திட்டம் தீட்டப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.