தனியார் வங்கி web
குற்றம்

தனியார் வங்கியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை; துப்பாக்கி முனையில் 18.80 கோடி ரூபாய் கொள்ளை

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் மொத்தம் 18.80 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jayashree A

மணிப்பூர் உக்ருல் நகரில் இயங்கி வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் 18.80 கோடி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் உக்ருல் நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் வியூலேண்ட் கிளை அம்மாவட்டத்தின் நாணய பெட்டகமாக அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தை சேமிக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 5.40 மணியளவில் அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட குழு ஒன்று முகமூடிகளால் தங்களின் முகத்தை மறைத்துக்கொண்டு, கையில் அதிநவீன ஆயுதங்களுடன் உக்ருல் நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்றுள்ளனர்.

முகமூடி கொள்ளையர்கள் அனைவரும் பிரதான நுழைவுவாயில் வழியாக இல்லாமல் ஊழியர்கள் பயன்படுத்தும் மற்றொரு வழியாக வங்கிக்குள் நுழைந்துள்ளனர். அச்சமயம் அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இருவரையும் ஒரு கழிவறைக்குள் அடைத்து, பிறகு முகமூடி கும்பல் வங்கிக்குள் புகுந்துள்ளது.

கொள்ளைக் கும்பலை கண்ட ஊழியர்கள் அனைவரும் சுதாரித்துக் கொள்ளும் முன்னதாக, கொள்ளைக் கும்பல் தங்களின் கையிலிருந்த துப்பாக்கியைக் கொண்டு வங்கி ஊழியர்களை தங்களின் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இதனிடையே கொள்ளையர்களில் ஒருவன் துப்பாக்கி முனையில் ஊழியர் ஒருவரின் உதவியுடன் பண பெட்டகத்தை திறக்கவைத்து 18.80 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வங்கியில் இருக்கும் CCTV உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்தும், கொள்ளையர்கள் யார் என்றும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.