குற்றம்

சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க பணி- சன் பார்மா நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம்!

சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க பணி- சன் பார்மா நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம்!

webteam

வேடந்தாங்கல் பகுதியில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க பணிகளை மேற்கொண்ட சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மாவின் மருந்து உற்பத்தி அளவு 25.5 டன்னிலிருந்து 134 டன்னாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. அதன் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால், இதற்கு முறையான அனுமதியை பெறவில்லையென புகார் கூறப்பட்டு வந்தது.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மீனவர் தந்தை கே ஆர் செல்வராஜ் குமார் மீனவர் நல சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், `தமிழ்நாட்டில் வன உயிரின அல்லது பறவைகள் சரணாலயங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பரப்பளவும் சரணாலயமாகவே கருதப்படும் என்று விதிகள் இருக்கையில், விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை’ எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது `சன் பார்மா தரப்பில் கடந்த 1994ல்தான் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 1992லிருந்து நிறுவனம் இயங்கி வருவதால் தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த தீர்ப்பாய உறுப்பினர்கள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு 1994ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் என கூறி, சன் பார்மாவிற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கும், அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு மற்றொரு அமர்வில் நிலுவையில் இருப்பதால் ,ஆலையை மூடுவது குறித்து இந்த மனுவில் உத்தரவிடவில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.