குற்றம்

உயிர் போய்விட்டது உடலையாவது மீட்டுத்தாருங்கள்: கண்ணீருடன் கதறியழுத பெற்றோர்

உயிர் போய்விட்டது உடலையாவது மீட்டுத்தாருங்கள்: கண்ணீருடன் கதறியழுத பெற்றோர்

kaleelrahman

கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு முசிறியில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரு குழந்தைகளின் உடலையாவது மீட்டு தாருங்கள் என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். 

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ரகுராமன். இவருடைய மகன்களான ரத்தீஸ்குமார்(12) மற்றும் மிதுனேஷ்(8) ஆகிய இருவரும் கடந்த 17ஆம் தேதி முசிறி பரிசல்துறை காவேரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போதும் குழந்தைகளை மீட்க முடியாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளை மீட்க, மீட்புப் பணியை தீவிரப்படுத்துவதோடு, பேரிடர் மீட்புக்குழுவை வைத்து குழந்தைகளை தேடி கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதனப்படுத்திய காவல் துறையினர், மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அந்த பகுதியில் காவேரி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் அடிக்கடி நீரில் மூழ்கி உயிரிழப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

காவேரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் குழந்தைகளை மீட்டு தர வேண்டும் என பெற்றோர்களும்,உறவினர்களும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்றிருந்தது, அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.