கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு பதிவு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி ஓசூர் சார் பதிவாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஓசூர் மாநகராட்சி தற்பொழுது தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது. ஏற்கனவே தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலானது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறு முதல் பெரு தொழில் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் இங்கு தயாரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்பையும் அளிக்கும் விதமாக இங்கு இயங்கி வருகிறது. இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் தொழில் நிமித்தமாக இந்த பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் இந்த பகுதியிலேயே தங்குவதற்கு ஏதுவாக நிலங்களை வாங்கி வீடுகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை அமைத்து வளர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு நிலம் வாங்குவது விற்பது என்பது ஓசூர் பகுதிகளில் ஏராளமாக நடைபெற்று வருவதால் இங்குள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதிவுகளை முறையாக மேற்கொள்வதற்கு ஏதுவாக டோக்கன் வழங்கும் முறையும் பதிவாளர் அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று சூழலில் பத்திரப்பதிவுகள் சார் பதிவாளர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு போலியான சான்றுகளும் ஆவணங்களையும் சமர்ப்பித்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது சார் பதிவாளராக பணியாற்றி வரும் ரகோத்தமன் என்பவர் தன்னிடம் பதிவுக்காக வந்த சில ஆவணங்களை சந்தேகத்தின் பேரில் சோதனை இட்டுள்ளார். சோதனை ஆய்வு மேற்கொண்டதில் மூலப்பத்திரங்கள் முற்றிலுமாக உண்மை பத்திரம் போல போலியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பதிவு செய்யும் நபரின் கையொப்பம் மற்றும் அவரது விவரங்கள் முற்றிலுமாக தவறான தகவல்களைக்கொண்டு பதிவு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலக முத்திரை, தமிழக அரசு இலட்சினை பொருத்திய முத்திரை உள்ளிட்டவைகள் அச்சு அசல் போல தயாரிக்கப்பட்டு அதன் மூலம் போலியான பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது.
மேலும் வட்டாட்சியர் வழங்கும் வருவாய் சான்று, ஜாதி சான்று போன்றவைகள் கூட போலியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சார் பதிவாளர் தொடர்ந்து ஆவணங்களின் உண்மை தன்மையை கண்டறியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பத்திரப்பதிவுக்கான கால அளவைகளில் தற்பொழுது நீட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பதிவாளர் அலுவலகத்தில் இதுபோன்று மூல ஆவணங்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால் பத்திரப்பதிவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் கடுமையாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதுதான் அதிர்ச்சியான ஒரு விஷயமாக உள்ளது.
இதைத்தொடர்ந்து அவ்வாறு போலி ஆவணங்களை சமர்ப்பித்ததன் தரவுகளைக்கொண்டு இதுபோன்று போலி ஆவணங்கள் குறித்து கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுமார் 4 பதிவுகளில் ஆவணங்கள் குறித்து போலீசாரிடம் முறையாக சார் பதிவாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரினை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பத்திரப்பதிவுகளுக்கான கால அளவை போதாதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற மூல பத்திரம் உண்மை தன்மை மற்றும் ஆவணங்களின் உண்மை தன்மை போன்றவற்றில் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது எனக் கூறும் பதிவுத்துறையினர், இதற்கு துறை சார்பில் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக பத்திரப்பதிவு ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதி செய்த பிறகு பதிவுகளை மேற்கொண்டால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படுவதுடன் பதிவுத்துறை அதிகாரிகளும் இதுபோன்ற சிக்கலில் இருந்து விடுபடுவார்கள் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.