குற்றம்

பிரசவம் பார்த்த பெண் போலி மருத்துவர்... தாய்-சேய் மரணம்..!

பிரசவம் பார்த்த பெண் போலி மருத்துவர்... தாய்-சேய் மரணம்..!

Sinekadhara

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள மமுரா பகுதியில் 27 வயது பெண் ஒருவர் தனியார் க்ளினிக்கிற்கு திங்கட்கிழமை காலை பிரசவத்திற்காகச் சென்றிருக்கிறார். அந்த மருத்துவருக்கு சரியாக பிரசவம் பார்க்கத் தெரியாததால், தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர்.

இதனால் பதற்றமடைந்த அந்த மருத்துவர் தாயையும், குழந்தையையும் க்ளினிக்கிற்கு வெளியே இழுத்துக் கொண்டுவந்து எறிந்துவிட்டு, க்ளினிக்கை பூட்டிச் சென்றுவிட்டார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு உடனே சென்றிருக்கின்றனர், விசாரித்ததில் அந்த மருத்துவர் தலைமறைவாகியது தெரியவந்தது. அந்த மருத்துவமனை குறித்து விசாரித்தபோது, இன்னும் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்றும், அந்த பெண் போலி மருத்துவர் என்றும் தெரியவந்துள்ளது.

அந்த போலி மருத்துவரின் குடும்பம் மமுராவில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவருவதாகவும், அவருடைய கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணிடம் மருத்துவர் சான்றிதழ் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் நொய்டாவின் போலீஸ் ஏடிசிபி அன்கூர் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தலைமறைவாகி உள்ள அந்த போலி மருத்துவரைத் தேடிவருகின்றனர். அலட்சியம் காரணமாக மரணம் ஏற்பட்டதற்கு இந்திய சட்டப்பிரிவு 304ஏ இன் கீழ் அந்த பெண்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.