குற்றம்

புதுக்கோட்டை: சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது; 650 மது பாட்டில்கள் பறிமுதல்

புதுக்கோட்டை: சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது; 650 மது பாட்டில்கள் பறிமுதல்

webteam

மிலாது நபி தினத்தை முன்னிட்டு இன்று அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 650 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மிலாது நபி திருநாளை முன்னிட்டு இன்று அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சோதனையில் இச்சடி அருகே சட்ட விரோத விற்பனைக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட 432 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வசந்தகுமார் என்பவரை கைது, அவரிடம் இருந்து 18 மது பாட்டில்கள் மற்றும் ஒரு செல்போனையும், மேலும் புதுக்கோட்டை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பாலு என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் தனிப்படை காவல் துறையினர். அதேபோல் அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் என்பவரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 91 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தனிப்படை போலீசார் இன்று அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு இதுவரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து சுமார் 650 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.