குற்றம்

காஞ்சிபுரம்: தனியார் கல்லூரி பேராசிரியை வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: தனியார் கல்லூரி பேராசிரியை வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழப்பு

Sinekadhara

தனியார் கல்லூரி பேராசிரியை வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த அனிதா, தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று தனது வீட்டில் இரவு உணவு முடித்த பிறகு மாடியிலுள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றிருக்கிறார். இந்நிலையில் இரவு பதினொரு மணிக்கு மேல், தனது வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த அக்காவிடம் செல்போன் மூலம் அழைத்து பயமாக இருக்கிறது என்றும், தனது அறையில் வேறு யாரோ இருப்பதுபோல் தோன்றுகிறது என்றும் கூறி போனை துண்டித்து உள்ளார். மேலும் அதேசமயத்தில் மொட்டை மாடியில் யாரோ ஒருவர் ஓடுவதுபோல் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து சந்தேகமடைந்த அனிதாவின் உறவினர்கள் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். மாடிக்குச் செல்லும் வழி பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்த வீட்டின் மொட்டை மாடி வழியாகச் சென்றிருக்கின்றனர். அனிதா தங்கியிருந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததுடன், அறையின் விளக்கு அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்தது. ஜன்னல் வழியே செல்போன் டார்ச் மூலம் உள்ளே பார்த்தபோது மயங்கிய நிலையில் அனிதா தரையில் விழுந்து கிடந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர்.

மயக்கநிலையில் முகம், மார்பு மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் ரத்தக் கசிவுடன் அனிதா இருந்ததைப் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, அனிதாவை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அனிதா உயிரிழந்தார். இதுதொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் அனிதாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அனிதாவின் அறையை சோதனையிட்ட காவலர்கள் ஒரு டீசர்ட் பாக்கெட்டையும், ஒரு பென்சிலையும் கண்டெடுத்திருக்கின்றனர். மேலும் அனிதா அணிந்திருந்த 6 சவரன் நகை மாயமாகி இருக்கிறது.

பேராசிரியர் அனிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பூட்டிய அறைக்குள் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.