மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் சென்று தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல்நிலையத்திற்கு உட்பட்ட முத்தாலம்பாறை பகுதியில் கடந்த 1982ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் அதேப் பகுதியை சேர்ந்த சின்னவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது திண்டுக்கல் அமர்வு நீதிமன்றம் வழக்கு நடைபெற்று கடந்த 28.08.1985 அன்று சின்னவெள்ளைக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 நாட்கள் அவசர காலவிடுப்பில் பரோலில் சென்றார்.
இதனையடுத்து தொடர்ந்து சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்து வந்ததுள்ளார். மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் ஆயுள் தண்டனை கைதி சின்னவெள்ளை தப்பித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கண்டுபிடிக்க முடியாததால் ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சின்னவெள்ளையை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட சின்னவெள்ளை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்க: மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி வேன் உதவியாளர் போக்சோவில் கைது