குற்றம்

நகைக்கடன் முறைகேடு - வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் சஸ்பெண்ட்

நகைக்கடன் முறைகேடு - வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் சஸ்பெண்ட்

Sinekadhara

கோவில்பட்டி அருகேயுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் நகைக்கடன் முறைகேடு செய்த செயலாளர் மற்றும் கூட்டுற சங்கதலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 900க்கும் மேற்பட்டோர் 5 பவுன் தங்க நகைக்கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் 343 பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாகவும், பலருக்கு நகைகளை பெற்றுக்கொண்டு தற்பொழுது வரை பணம் வழங்கவில்லை என்றும், வட்டி மட்டும் செலுத்த கூறுவதாகவும், எனவே இதில் உள்ள முறைகேடுகளை களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் கூட்டுறவு சங்கத்தினை பூட்டுதல், முற்றுகையிடுதல், சாலைமறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பொது மக்கள் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்திருந்தனர். மேலும் இப்பிரச்னை குறித்து தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனுவும் அளித்திருந்தனர்.

இந்நிலையில், வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 489 நபர்களுக்கு ரூ.3.79 கோடி ரூபாய் கடன் வழங்காமல் நகையை மட்டும் பெற்றுக்கொண்டு, கடன் வழங்கியதாக ஆவணங்களை தயார்செய்து முறைகேடுகள் செய்துள்ளதாகவும், நகைக்கடன் தள்ளுபடி பெறும் நோக்கத்தில் அடமானம் வைக்கப்பட்டு இருப்பதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் 24ஆம் தேதி முதல் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சங்க தலைவர் தற்காலிகமாக செல்வராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் முறைகேட்டிற்கு காரணமான செயலாளர் மற்றும் இதர நபர்கள் மீது குற்றப்புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1983ஆம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81இன் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.