உண்டியல் திருடப்பட்ட கோவில் PT
குற்றம்

ஓமலூர்: வேலியே பயிரை மேய்ந்து; பூசாரியே உண்டியலை திருடிய சம்பவம்

ஓமலூர் அருகே வேலியே பயிரை மேய்வது போல, கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை பூசாரியே திருடிவிட்டு, மர்ம நபர்கள் திருடியதாக நாடகமாடி உள்ளார். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பூசாரியே பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அம்பலமானது.

Jayashree A

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்தாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் என்கின்ற வெள்ளையன் பூசாரியாக உள்ளார். இந்த கோவிலில் தை மாத திருவிழா நடத்தப்படும். மேலும், அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை ஆகிய விசேஷ நாட்களில் பூஜையில் நடத்தப்படும்.

பூசாரி வெள்ளையன்

இந்த முத்தாளம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் பூசாரியொருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பெயரில் தாத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த கோவில் நிர்வாகிகள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு, பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூசாரியிடம் விசாரித்தபோது மர்ம நபர்கள் திருடி விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவிலில் வைத்துள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது முத்தாளம்மன் கோவிலின் பூசாரி வெள்ளையனே, கோவிலில் இருந்த வேல் கொண்டு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதை பார்த்த பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பூசாரி பூட்டை உடைத்த சிசிடிவி காட்சி

இதையடுத்து பூசாரி வெள்ளையனை பிடித்து, ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோவில் பூசாரியே கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிய சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பூசாரியே கோவிலில் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.