குற்றம்

ஒட்டன்சத்திரம்: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் மோசடி – ஊழியர் இருவர் கைது

ஒட்டன்சத்திரம்: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் மோசடி – ஊழியர் இருவர் கைது

webteam

ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர்கள் இருவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சாமியார் புதூரைச் சேர்ந்தவர் செல்வ பிரகாஷ் (27). இவர், ஒட்டன்சத்திரத்தில் எம்எஸ்பி என்ற தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், சிவா, ரகு, பிரசாந்த், மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், வத்தலகுண்டு, ரெட்டியார்சத்திரம், செம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தனி நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து நாள்தோறும் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 பேரும் சுமார் ரூ.59 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் செல்வபிரகாஷ் சம்பந்தப்பட்ட 5 பேரிடமும் கேட்டபோது சரியான பதில் கூறாமல் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட உரிமையாளர் செல்வ பிரகாஷ் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் 5 பேர் மீது சுமார் 60 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே ஒட்டன்சத்திரத்தில் தலைமறைவாக இருந்த ஜெயபிரகாசை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த ரகுவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.