குற்றம்

அமெரிக்க பெண்போல் நடித்து ரூ.51 லட்சம் மோசடி - நைஜீரிய இளைஞர் கைது

அமெரிக்க பெண்போல் நடித்து ரூ.51 லட்சம் மோசடி - நைஜீரிய இளைஞர் கைது

Sinekadhara

அமெரிக்க பெண்போல் நடித்து ஆன்லைனில் 51 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நைஜீரிய இளைஞர் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையிடம் பிடிபட்டுள்ளார். நடந்தது என்ன?

பேராசையை தூண்டும் தகவல்களுடன் வந்த ஒரே ஒரு மின்னஞ்சல். அந்த தகவல்களை எல்லாம் நம்பி 51 லட்சம் ரூபாய் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கிறார், கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த பெண். பாதிக்கப்பட்ட அவருக்கு சில மாதங்களுக்கு முன் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவரின் கணவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வாழ்வின் மீதான பிடிப்பை இழந்த அவர் தனது சொத்துகளை தானம் செய்ய முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சொத்துகளைப் பெற்றுக்கொள்ள தாங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்றும், இதன்மூலம் பல மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என கன்னியாகுமரி பெண்ணிடம் ஆசை வார்த்தை அள்ளி வீசப்பட்டுள்ளன.

இதை நம்பிய அவர், அடையாளம் தெரியாத நபருடன் ஆன்லைனில் உரையாடலை தொடங்கியிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து பணத்தை எப்படி கொடுப்பீர்கள் என்று கேட்டபோது, அதற்கு ஒரு கன்டிஷன் மட்டும் கராராக போடப்பட்டது. கோடிக்கணக்கிலான அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று இந்தியா கொண்டுவர, சில லட்சங்கள் முன்பணம் செலுத்த வேண்டுமென தூண்டில் வீசியிருக்கிறது கொள்ளை கும்பல். அதையும் நம்பிய அப்பெண், பல தவணைகளில் சிறுக, சிறுக 51 லட்சம் ரூபாய் வரை பணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் சொன்ன அமெரிக்க டாலர்கள் மட்டும் வரவில்லை. ஒருகட்டத்தில் சந்தேகம் ஏற்படவே தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அவர், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

முதற்கட்ட தகவல்களை திரட்டிக்கொண்டு விசாரணையில் இறங்கியது சைபர் கிரைம் தனிப்படை. பாதிக்கப்பட்ட பெண், பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு, செல்ஃபோன் எண்களை ஆராய்ந்ததில், அது உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை காண்பித்திருக்கிறது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அபுகா பிரான்சிஸ் என்பவரை கைது செய்தனர். எபுகா பிரான்சிஸ் யார்? அவரின் பின்னணி என்ன? அவருக்கும், இந்தியாவில் உள்ள கும்பல்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? அவர் எத்தனை வருடங்களாக இம்மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார்? மோசடி செய்த பணம் எங்கு உள்ளது என பல்வேறு கேள்விகள் அதிகாரிகள் முன் எழுந்திருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் விடை காண விசாரணையில் இறங்கியிருக்கிறது காவல்துறை.