குற்றம்

அடேங்கப்பா நெல்லை கொள்ளை..! - சினிமாவை மிஞ்சும் வகையில் சேஸிங் செய்து பிடித்த போலீஸ்

அடேங்கப்பா நெல்லை கொள்ளை..! - சினிமாவை மிஞ்சும் வகையில் சேஸிங் செய்து பிடித்த போலீஸ்

webteam

நெல்லையில் கைவரிசையை காட்டிவிட்டு தப்பிச்சென்ற கொள்ளை கும்பலை சாதுர்யமாக நெல்லை போலீஸ் பிடித்துள்ளனர்.

நெல்லையின் விஎம் சத்திரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 77 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் எந்த வித துப்பும் இன்றி போலீஸார் திணறி வந்தனர். கைரேகைகள் கூட கிடைக்காத நிலையில், கடைசியாக சிசிடிவி கேமராக்களின் உதவியை நாடிய போலீஸுக்கு ஒரு சிறிய நம்பிக்கை பிறந்தது. கொள்ளை நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் குறிப்பிட்ட கார் ஒன்று அடையாளம் காணப்பட்டது. அந்த கார் செல்லும் பகுதியை அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைக்கொண்டு போலீஸார் பின் தொடர்ந்தனர்.

இந்த பின்தொடரும் நிகழ்வு ஒன்று, இரண்டு அல்ல சுமார் 400 கி.மீ தூரம் வரை சென்றது. இதற்கிடையே காரின் நம்பர் பிளேட்டுகள் அடிக்கடி மாற்றப்பட்டதால் போலீஸார் குழப்பங்களும் அடைந்தனர். ஆனாலும் காரின் வடிவம் மற்றும் சில ஸ்டிக்கர்களை வைத்து அந்த கார் தான் திருட்டு கார் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். 400 கி.மீ பயணத்தில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் பார்வையிடப்பட்டிருக்கின்றன. பல நாட்கள் இந்த சிசிடிவி பார்வை பயணம் தொடர்ந்திருக்கிறது. பொறுப்புடனும், பொறுமையுடனும் காவல்துறையினர் இந்த வழக்கை கையாண்டுள்ளனர்.

நெல்லை மாநகர ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், இந்த வழக்கிற்கு கூடுதல் கவனத்தை கொடுத்து தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கின்றனர். இறுதியாக திருப்பூர் அருகே ஒரு உணவகத்தில் அந்த கார் நின்றிருக்கிறது. காருக்குள் இருந்து இறங்கிய 4 நபர்கள் உணவகத்திற்குள் சென்று, உணவு உண்டுள்ளனர். இந்த காட்சிகளை கண்ட போலீஸார் 4 பேரின் புகைப்படத்தையும், திருப்பூர் போலீஸாரிடம் கொடுத்து விசாரித்தனர். விசாரணையில் அதிலிருந்த ஒருவர் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் கைதானவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் யாசர் அராபத், ராமஜெயம், முகமது ரபீக், குருவி சக்தி ஆகிய 4 கொள்ளையர்களையும் நெல்லை போலீஸார் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அந்த 4 கொள்ளையர்களும் பல இடங்களில் கொள்ளையடித்த நகைகளை வைத்து நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அத்துடன் சொகுசுக் கார், பங்களா வீடு என தொழிலதிபர்களாக வலம் வந்துள்ளனர்.

கொள்ளையடித்த நகைகளை எல்லாம் தங்கள் கடைக்கு கொண்டு சென்று விற்பனையும் செய்துள்ளனர். இதனால் கடையில் வியாபாரம் பெருகியதால், நெல்லைக்கு குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்மிட வந்துள்ளனர். அப்போது தான் அங்கே ஒரு வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். இறுதியில் நெல்லை போலீஸிடம் சிக்கியுள்ளனர். சாதுர்யமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த நெல்லை போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.