சென்னை கொளத்தூர் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் கூட்டாளிகளுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாதுராம், அவரது கூட்டாளிகளான தினேஷ், பக்தாராம் ஆகியோர் இன்று அதிகாலை விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டு, அதிகாலையிலேயே நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நாதுராம் உள்ளிட்ட மூவருக்கும் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ராஜமங்கலம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது.
இவ்வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராமை கைது செய்வதற்காக, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரன் தலைமையிலான காவலர்கள் ராஜஸ்தான் சென்றனர். கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி கொள்ளையர்களுடன் நடந்த மோதலில், ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்டபோது, எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்தார்.