கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கூலி தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர், இதில் கடந்த 8ஆம் தேதி 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், திமுகவை சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த திங்கட்கிழமை பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 13ஆம் தேதி வரை கடலூர் சிறையில் வைத்து 13ஆம் தேதி கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்த பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை ரமேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்
அப்போது நீதிபதியிடம் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கில் ரமேஷை இரண்டு நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டனர், நீண்ட விசாரணைக்குப் பிறகு ஒரு நாள் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதனையடுத்து, திமுக எம்.பி ரமேஷிடம் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.