மதுரையில் ஸ்வீட் கடையை உடைத்து ஸ்வீட் மற்றும் காரப்பொருட்களை திருடிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கண்ணனேந்தல் பகுதியில் உள்ள லாவண்யா காம்ப்ளக்ஸில் பானுப்பிரியா என்பவர் வான்யா ஸ்வீட்ஸ் கடை நடத்திவருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். வழக்கம்போல் இன்று கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பணம் வைக்கப்பட்ட கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது. அதோடு கடையில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காரம் மற்றும் ஸ்வீட்ஸ் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக புதூர் காவல்நிலையத்தில் பானுப்பிரியா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை மற்றும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காரம் மற்றும் ஸ்வீட்சை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கே.புதூர் அடுத்த கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவர் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று மதுரையில் உள்ள பல்வேறு ஸ்வீட் கடைகளில் புகுந்து ஸ்வீட் மற்றும் காரப் பொருட்களை திருடி வீட்டில் வைத்து தினந்தோறும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.