குற்றம்

மதுரை: மது போதையில் மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்டதாக 6 இளைஞர்கள் கைது

மதுரை: மது போதையில் மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்டதாக 6 இளைஞர்கள் கைது

webteam

மதுரையில் மதுபோதையில் அரசு மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று மாலை இராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றுள்ளது. அப்போது ஊர்தியின் முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஒலி எழுப்பியவாறு அதி வேகத்தில் , ஆபாசமான வார்த்தைகளால் கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இதனை கண்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களின் செயலால் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் கல்லூரி வாயில் முன்பாக நின்றுகொண்டு இளைஞர்கள் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை காலேஜ் கிட்ட ஏன் இப்படி பண்றீங்க மாணவிகள் பயப்படுறாங்க எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மதுபோதை கும்பல் மாணவியின் தந்தையை தாக்கியதோடு, கல்லூரி வளாகத்திற்குள் சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,; செல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மது போதையில் மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்ட மதுரை மாநகர் அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம், நாகப்பிரியன், சதீஸ் குமார் ,அஜித்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மதுரை மாநகர் பகுதியில் தொடர்ந்து மகளிர் கல்லூரி முன்பாக மாணவிகளை அச்சுறுத்தும் சம்பவம் அதிகரித்துவரும் நிலையில், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லையா? ஏன்ற கேள்வி எழுந்துள்ளது.