அரிசி வாங்குவது போல் நடித்து தராசு, எடை கல்லை திருடி செல்லும் வடிவேலு காமெடி போல, சென்னை மாங்காடு அருகே வாழை தார் வாங்குவது போல் நடித்து பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேல், தான் நடித்த ஒரு படத்தில் அரிசி கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த தராசு, எடை கற்கள், நோட்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் திருடி சென்று விடுவார். அது போன்ற ஒரு நூதன சம்பவம் மாங்காடு அருகே நடந்துள்ளது. மாங்காடு பகுதியையடுத்த மதனந்தபுரம் பகுதியில் வாழை பழ மண்டி வைத்திருப்பவர் சாகுல் அமீது. இவர் கடைக்கு, நேற்று முன்தினம் வாழைத்தார் வேண்டும் என வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருக்கிறார். அந்நபர் கடைக்குள்ளேயே சென்று எது போன்ற வாழைத்தார் வேண்டுமென அவரே பார்த்துள்ளார்.
கடையின் உரிமையாளரும் ஒவ்வொரு வாழைத்தாராக எடுத்து காட்டி கொண்டிருந்த நிலையில், அவரது கவனத்தை திசை திருப்பி அந்நபர், வாழைத்தாரை தூக்கி ஒரு நாற்காலியின் மீது வைத்துவிட்டு அங்கு வைத்திருந்த ஒரு பண டப்பாவை கையிலெடுத்திருக்கிறார். அதிலிருந்த பணத்தில் இருந்து ரூ.2000 பணத்தை திருடிக் கொண்டு, ‘வாழைத்தார் வேண்டாம்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றும்விட்டார் அந்நபர்.
சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் பணம் வைத்திருந்த டப்பாவை திறந்து பார்த்தபோது அதில் ரூ.2,000 இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது வாழைத்தார் வாங்க வந்த நபர் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திரைப்பட பாணியில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: நீலகிரி: சாலையில் உலவிய காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர்