கைது செய்யட்டப்பட்ட சிறுவர்கள்  file image
குற்றம்

"பணத்தின் மீது மோகம்".. விவசாயி அடித்து கொலை - சிக்கிய சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு சென்ற சோகம்!

வேடசந்தூரில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (41). இவர் இருசக்கர வாகனங்களை வாங்கிவிற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று அய்யலூர் அருகே உள்ள அ.கோம்பை காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற வடமதுரை காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முருகேசன்

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு முருகேசனை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், முருகேசன் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் வேலை செய்த போது அந்த சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அய்யலூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது முருகேசனிடம் பணம் அதிகம் இருப்பதாக நினைத்து அவரை கொலை செய்து பணத்தை திருடி செல்ல சிறுவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உயிரிழந்த விவசாயி முருகேசன்

அதனைத் தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் முருகேசனை அ.கோம்பை பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருடன் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மது போதை தலைக்கு ஏறியதும் முருகேசனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, பையில் பணம் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். பணம் இல்லாததால், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் திருடிச் சென்ற தங்கச் சங்கிலியை வடமதுரை அருகே உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைத்து பணத்தை பெற்றுச் சென்றதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 2 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

பணத்திற்காக சிறுவர்கள் 2 பேர் விவசாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.