கோவையில் விபத்தில் 4 பேர் உயிரிழந்த வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ஜெயபால், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று லாரி ஓட்டி வந்தார். அப்போது, கண்ணப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது ஏறி, அருகில் இருந்த புகைப்பட ஸ்டூடியோ மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த விஜயா, ஒன்றரை வயது காயத்ரி, பொன்னுசாமி , சுடலைமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய போக்குவரத்து விபத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், லாரியில் இருந்த ஓட்டுநர் ஜெயபால் மற்றும் லாரி உரிமையாளர் சசிகுமாரிடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் கவனம் திசை திரும்பியதால், லாரி ஜெயபாலின் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை கோவை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை முடிவில் வழக்கிலிருந்து சசிகுமார் விடுவிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் ஜெயபாலுக்கு 2ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.