திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயத்திடம் கேட்டதற்கு இது சாரியான அணுகுமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி (19). இவர் கடந்த 3ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரைவிட்டு சற்று தொலைவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25) கௌதமியை பின்தொடர்ந்து வந்து கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்ததால், அவரிடமிருந்த கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்த கௌதமி நடந்தவற்றை கூறியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையிலிருந்து இந்த கொலை தற்காப்புக்காக செய்யப்பட்டதுதான் என போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இது தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்திருக்கிறார்.
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற அஜித்குமாரை தற்காப்புக்காக கௌதமி கொலைசெய்த வழக்கில் காவல்துறையின் அணுகுமுறை சரியானதுதான் என்று கருத்து தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள சரத்துகளையும் நம்மிடம் விளக்கினார்.
இந்திய தண்டனை சட்டத்தில் பிரைவேட் டிபன்ஸ் என்ற ஒரு செக்ஷன் இருக்கிறது. அதன்படி உன்னை ஒருவன் தாக்க வரும்போது நீ உன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவனை நீ தாக்கலாம். அந்த தாக்குதல் கொலையாக இருந்தால்கூட மன்னிக்கப்பட முடியும். ஏனென்றால் கொலைக்கு எப்பவுமே காரணமாக சொல்லப்படுவது நோக்கம்தான். கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தானரா அல்லது எந்த நோக்கமும் இல்லாமல் கொலைசெய்தனரா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த வழக்கு பிரைவேட் டிபன்ஸில் தான் வரும். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த பெண் செய்தது குற்றமாகாது என்றுதான் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதனால்தான் காவல்துறையினர் இதுவரையிலும் அந்த பெண்ணை கைது செய்யாமல் முதல் தகவல் அறிக்கை மட்டும் போட்டு வைத்திருக்கிறார்கள். சட்டப்படி அந்த பெண் செய்தது குற்றமில்லை என்றுதான் பார்க்கப்படும். தற்காத்து தற்கொண்டான் பேணி என திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஒருபெண் தன்னை முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த உரிமை பெண்ணுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இருக்கிறது. தன்னை தற்காத்துக் கொள்ள இருபோன்று கொலைசெய்வது குற்றமில்லை என்றுதான் இந்திய தண்டனை சட்டம் சொல்கிறது” என்று கூறியுள்ளார்.