படப்பையில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு கைதான 6 பேரில், 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம், அ.தனஞ்சேரியைச் சேர்ந்த செங்கேணி (29), இவர், கடந்த 11ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு ஆரம்பாக்கம் ஏரிக்கரை பின்புறம வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 3000 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தபோது கத்தியை சாலையில் தேய்த்து தீப்பொறி பறக்க அனைவரையும் மிரட்டி விட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட வஞ்சுவாஞ்சேரியைச் சேர்ந்த வினோத் (20), நாவலூரைச் சேர்ந்த சுரேஷ் (20), சாமி (எ) ஹரிஷ் (25), ராஜா (எ) லாரன்ஸ் (19), மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் (25), ஆகிய 6 பேரை கடந்த 12ம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து 6 பட்டாக் கத்திகள், பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தாம்பரம் ஆணையர் ரவி உத்தரவிட்டார்.