குற்றம்

உயர் அதிகாரி உத்தரவிட்டால் கொலை செய்வீர்களா? - எஸ்.பிக்கு நீதிபதி சராமரி கேள்வி

உயர் அதிகாரி உத்தரவிட்டால் கொலை செய்வீர்களா? - எஸ்.பிக்கு நீதிபதி சராமரி கேள்வி

Sinekadhara

உயர் அதிகாரி உத்தரவிட்டால் கொலை செய்வீர்களா? என சஸ்பெண்ட் செய்யப்பட்ட செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறப்பு டிஜிபி அந்தஸ்த்தில் இருந்த அதிகாரி மீதும், பெண் எஸ்.பி.யை புகார் அளிக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி-யாக இருந்த அதிகாரி மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை எனக்கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியும், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.யும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இரண்டு மனுக்களும் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, உயர் அதிகாரி என்ற முறையில் கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்படியே செயல்பட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி. வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வேல்முருகன், காவல்துறையிலேயே பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்படாதது அவமானகரமானது எனத் தெரிவித்தார். உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் எனவும் அதிருப்தி தெரிவித்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-யின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் விழுப்புரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதனிடையே, விசாகா குழு விசாரணைக்கு தடை கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்ய மற்றொரு மனுவுக்கு, பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.