குற்றம்

துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையோடு 2கிமீ நடந்து காவல்நிலையம் சென்ற கணவன்..!

துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையோடு 2கிமீ நடந்து காவல்நிலையம் சென்ற கணவன்..!

Sinekadhara

உத்தரபிரதேசத்தில், மனைவியை சந்தேகித்த கணவர், அவர் தலையை துண்டித்து கையில் ஏந்தியபடியே 2 கிமீ நடந்துசென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கின்னர் யாதவ்(40 வயது) என்ற நபர் காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவர் மனைவி விமலா (35 வயது), பக்கத்து வீட்டுக்காரரான ரவிகாந்த் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்து கோபமடைந்த யாதவ், காந்துடன் சண்டைப் போட்டு, அவரை தாக்கியிருக்கிறார். அதைத் தடுக்கவந்த தனது மனைவிமீது ஆத்திரமடைந்த அந்த நபர், அருகிலிருந்த கோடரியை எடுத்து தனது மனைவியின் தலையை துண்டித்திருக்கிறார். அந்த தம்பதியின் இரண்டு மகன்களும் அப்போது வீட்டில் இல்லை.

மனைவியின் தலையை கையில் ஏந்தியபடியே 2 கிமீ தொலைவில் உள்ள பபேரு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். 15 நிமிடம் காவல் நிலையத்தில் மனைவியின் தலையை கையில் ஏந்தியபடியே அமர்ந்திருந்த யாதவை போலீஸார் கைது செய்து, இந்திய சட்டப்பிரிவு 302(கொலை)இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், தனது மனைவிக்கு பக்கத்துவீட்டுக்காரரான எலக்ட்ரீஷியன் ரவிகாந்துடன் தொடர்பு இருப்பதாக தான் சந்தேகித்ததாகவும், இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததை தான் பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரவிகாந்த் தன்னுடைய வீட்டிற்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.