தாயுடன் தகாத முறையில் பழகியவரை, 22 முறை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு டெல்லி துவாரகா பகுதியில் வசிப்பவர் அமான் (20). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். வேலை முடிந்து ஒருநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயுடன் ஒருவர் வாக்கு வாதம் செய்துக்கொண்டிருப்பதை கண்டார். அமானை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் அவர்கள் நடத்திய வாக்குவாதத்தின் மூலம், அந்த நபர் தனது தாயுடன் தகாத முறையில் பழகியவர் என்பதை அமான் அறிந்துகொண்டார். ராஜூ (40) என்ற அந்த நபரை, அமான் கடுமையாக எச்சரித்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் அந்த நபர் அமானின் வீட்டுப்பக்கம் வரமால் இருந்துள்ளார். ஆனால் ராஜூ, அமான் வீட்டிற்கு மீண்டும் வரத்தொடங்கினார்.
இதனால் கடுப்பான அமான், ‘இறுதியாக எச்சரிக்கிறேன். இனி வீட்டுப்பக்கம் வராதே. இல்லை என்றால் கொன்றுவிடுவேன்’ என ராஜூவை எச்சரித்துள்ளார். ‘சரி, இனி வரமாட்டேன்’ என்று கூறிவிட்டு ராஜூ சென்றுள்ளார். ஆனால் ராஜூ, அமான் வீட்டிற்கு வருவதை நிறுத்தவில்லை. இதனால் கடும் ஆத்திரமும், மன உளைச்சலுக்கும் ஆளான அமான், ராஜூவை கொல்லத் திட்டமிட்டார். நடந்த சம்பவங்களை தனது அலுவலக நண்பர்களான ஆசிஷ் (21) மற்றும் சஹிலிடம் (19) கூறியுள்ளார். அவர்களும் இத்திட்டத்திற்கு உதவி புரிவதாகத் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் கோபமாகச் சென்ற அமான், ராஜூவைக் கண்டதும் தாக்கியுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 22 முறை குத்தியுள்ளார். இதில் துடிதுடித்த ராஜூ, ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். இதையடுத்து மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சாலையில் சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி கிடந்த ராஜூவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உண்மை தெரியவந்தது. அதன் அடிப்படையில் அமானை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அமான் வீட்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், அவர் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணை மூலம், ஆசிஷ் மற்றும் சஹில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.