குற்றம்

டிக்டாக் மூலம் இளைஞரிடம் பணம் பறித்த இளம்பெண்: 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸ்

டிக்டாக் மூலம் இளைஞரிடம் பணம் பறித்த இளம்பெண்: 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸ்

webteam

டிக்டாக்கில் இளைஞரை ஏமாற்றி 97,000 ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை 24 மணி நேரத்தில் கைது செய்து தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மதுரை எல்லீஸ்நகர் போடி லைன் சூர்யா அப்பார்மென்ட்டை சேர்ந்தவர் 23 வயதான ராமச்சந்திரன். இவர் மதுரை தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் மற்றும் முகநூல் செயலிகளை அளவுக்கு மீறி பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக கல்லூரி விடுமுறை என்பதால் டிக்டாக் செயலியை அளவுக்கு மீறி உபயோகித்த நிலையில், டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த சுசி என்கிற பெண் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் ராமச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து சுசி என்ற அம்முகுட்டியிடம் டிக்டாக் மூலம் அதீத அன்பு காட்டியுள்ளார் ராமச்சந்திரன். சுசியின் முகநூல் பக்கத்திலும் இணைந்து, இருவரும் பேசி வந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட சுசி தனது குடும்பத்தில் பிரச்னை எனவும், மருத்துவமனை செலவுக்கு பணம் தேவை எனவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை நம்பிய ராமச்சந்திரன் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு 97,000 ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட சுசி, சில நாட்கள் பேசாமல் இருந்ததோடு, முகநூல் மற்றும் டிக்டாக் செயலியில் தலைகாட்டாமல் அணைத்து வைத்ததால், சந்தேகமடைந்த ராமச்சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சுசி மீது வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மதுரை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி அருகில் தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம்பெண் சுசியை காவலர்கள் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து டிக்டாக் மூலம் மோசடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்துள்ளனர்.

ஆடம்பரமாக வாழ நினைத்த இளம்பெண் சுசி அதற்கு ஒரு கருவியாக டிக்டாக்கை பயன்படுத்தி உள்ளார் எனவும், டிக்டாக் மற்றும் முகநூல் மூலம் பலபேரிடம் இதுபோல பணத்தை மோசடி செய்திருப்பதாகவும் தெரிகிறது.