கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் மாயக்கண்ணாடி இருப்பதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாயுடன் தப்பி ஓடியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த அரச முத்து மற்றும் திவாகர் ஆகிய இருவரும் சேர்ந்து, கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் மாயக்கண்ணாடி தங்களிடம் இருப்பதாகக் கூறி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகிய நால்வரும் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மாயக்கண்ணாடி வாங்கும் ஆர்வத்தில் பெரியகுளம் பகுதிக்கு இன்று காலை காரில் வந்தபோது, மாயக்கண்ணாடி இருபதாக கூறிய அரச முத்து மற்றும் திவாகர் இருவரும் யுவராஜிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கியவுடன் தப்பி ஓடவே யுவராஜ் மற்றும் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அரசு முத்துவை விரட்டிப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், பணத்தை வைத்திருந்த திவாகர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து யுவராஜ் மற்றும் நண்பர்கள் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் அரசமுத்துவை ஒப்படைத்து புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திவாகர் என்ற நபரை தேடி வருகின்றனர். மாயக்கண்ணாடி இருப்பதாக நம்பி வாங்க வந்து ஒரு லட்சம் ரூபாயை பறிகொடுத்து ஏமாந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.