குற்றம்

ரூ.1.8 கோடி வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது

ரூ.1.8 கோடி வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது

webteam
ரூ.1.8 கோடி வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்த 4 பேரை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை பாலவாக்கம் ஜெயசங்கர் நகரில் உள்ள சுமார் 4,464 சதுரடி கொண்ட வீட்டுமனையை கிருபானந்தன் என்பவர் கடந்த 1993ம் ஆண்டு வாங்கினார். பின் 1996ம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த கிருபானந்தன், அவரது நிலத்தினை நிர்வகிக்க சென்னை அம்பத்தூரை சேர்ந்த  கோபாலன் என்பவரை நியமித்தார். இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் நில உரிமையாளரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒருவர் நில அபகரிப்பு செய்ததாக காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் கோபாலன் புகார்  அளித்தார். 
புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் நில உரிமையாளர் கிருபானந்தன் என்பவரை போல் சாமிக்கண்ணு என்பவர் ஆள்மாறாட்டம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அந்நபர் தன் பெயரில் போலி ஆதார் அட்டை தயார் செய்து ரூ.1.8 கோடி மதிப்புடைய சுமார் 4464 சதுரடி கொண்ட வீட்டுமனைக்கான ஆவணத்தையும் போலியாக தயார்செய்திருக்கிறார். கிடைக்கும் தொகை மூலம் அவரது சகோதரரான ரவிக்குமார் என்பவருக்கு செட்டில்மென்ட் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.  
இதுகுறித்து நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு ஆவணங்களை பதிவு செய்து நில மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்ட சாமிக்கண்ணுவின் கும்பலை கைது செய்திட காவல் உதவி ஆணையாளர்  ஆனந்தராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் விசாரணை முடிவில், ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி செய்த சென்னை பள்ளிக்கரணை கோவலன் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு (வயது 54), விருகம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவினை சேர்ந்த ரவிக்குமார் (வயது 38), பள்ளிக்கரணை மலிகேஷ்வரர் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 59), பெசன்ட்நகர் பாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமரன் (வயது 40) ஆகியோரை  கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நில மோசடி கும்பலை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.