தன்னுடன் நடந்த முதல் திருமணத்தை மறைத்து, மேலும் இரு பெண்களை திருமணம் செய்துகொண்ட தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவணங்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் முதல் மனைவி புகார் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் வசிப்பவர் ஏஞ்சல் மரிய பாக்கியம் (36). இவர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் தன்னுடன் நடந்த திருமணத்தை மறைத்து மேலும் இரு பெண்களுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த மனுவில் கூறியதன்படி, ஏஞ்சல் மரிய பாக்கியத்திற்கும், குரும்பூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009 ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு அபிஷா, அஜிதா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் முத்துக்குமார். மேலும் அவரது வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை பணமும் கேட்டு துன்புறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஏஞ்சல் மரிய பாக்கியம் புகார் அளித்துள்ளார். ஆனால் முத்துக்குமார் குடும்பம் சமாதானம் சொல்லி அழைத்துச்சென்று மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். துன்புறுத்தல் அதிகமானதும் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார் ஏஞ்சல் மரிய பாக்கியம்.
ஆனாலும் குரும்பூர் காவல் நிலையத்தில் 104/15, CC-55515 என பதிவுசெய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏஞ்சல் மரிய பாக்கியம் தனது திருமணத்திற்கு தாய் வீட்டில் இருந்து கொடுத்த 12 பவுன் நகையை மகள்களின் கல்வித்தொகைக்கு உதவியாக கேட்டுள்ளார். அதையும் தர மறுத்ததால் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புச்செலவிற்கும், தனது வாழ்வாதாரத்திற்கும் DVC 2/2017 என்ற வழக்கினை தாக்கல் செய்து அந்த வழக்கின் தீர்ப்பு 30.11.2020 தேதியில் மாத செலவுத்தொகையாக ரூ. 9000 -த்தை, ஒவ்வொரு மாதமும் மனைவிக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தரும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி மாத பராமரிப்பு செலவு தொகையினை வழங்காதால் மீண்டும் கணவர்மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், நாசரேத்தைச் சேர்ந்த மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்ற அருள் அன்புச்செல்வி என்பவரை முத்துக்குமார் திருமண செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும், முத்துக்குமாரின் பெற்றோர்கள் ஏற்பாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த டெல்சி ராணி என்பவரையும் திருமணம் செய்துகொண்டதை அறிந்த மரிய பாக்கியம் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதில் அன்பு அருள்செல்வி மற்றும் டெல்சி ராணி ஆகியோரிடம் முத்துக்குமார் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முதல் திருமண பந்தத்தை மறைத்து முறையான விவாகரத்து ஏதும் பெறாமல் ஏமாற்றி, பல பெண்களை திருமணம் செய்துகொண்டு சட்டத்திற்கு புறம்பான முறையில் வாழ்ந்துவரும் முத்துக்குமார் மற்றும் அருள் அன்பு செல்வி, டெல்சிராணி மற்றும் துணையாக இருந்த முத்துக்குமாரின் தந்தை தமிழரசன், தாயார் சாரதா மற்றும் முத்துக்குமாரின் தங்கை நித்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.
இந்த மனுவுடன் இரண்டாவதாக மற்றும் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டவர்களின் புகைப்படங்கள், திருமணத்திற்கான ஆவணங்களையும் இணைத்து புகாரில் குறிப்பிட்டுள்ளார்.