குற்றம்

“பரிட்சைக்கு போகமுடியாம பண்ணிட்டாங்க சார்..”- தீக்காயங்களுடன் காவல்நிலையத்தை நாடிய மாணவன்!

“பரிட்சைக்கு போகமுடியாம பண்ணிட்டாங்க சார்..”- தீக்காயங்களுடன் காவல்நிலையத்தை நாடிய மாணவன்!

webteam
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பள்ளி மாணவன் மீது இளைஞரொருவர் மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மாதா காலணி பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரோ. இவருக்கும் இவரது தம்பி ஷாஜி (32) என்பவருக்கும் குடும்ப சொத்து பங்கு பிரிப்பது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை குடிபோதையில் அண்ணன் ஆண்ட்ரோ வீட்டிற்கு ஷாஜி சென்றுள்ளார். அங்கு ஆண்ட்ரோ வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கற்களால் உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரையும் தாக்க தொடங்கியுள்ளார்.
இதைக்கண்ட ஆண்ட்ரோவின் 11-ம் வகுப்பு படிக்கும் மகன் கில்ட்ரோபின் மிர்சன், தந்தையை காப்பாற்ற உள்ளே நுழைந்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஷாஜி, சிறுவனை சரமாரியாக தாக்கியதோடு வீட்டின் சமயலறை அடுப்பில் இருந்த குக்கரை எடுத்து வீசியுள்ளார். இதில் குக்கரில் இருந்த சூடான குழம்பு சிறுவன் மீது பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவன், அந்த தீக்காயங்களுடன் குளச்சல் காவல் நிலையத்திற்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு காவல்துறையிடம், தனக்கு இன்று நடைபெற உள்ள செய்முறை தேர்வுக்கு செல்ல முடியாத அளவுக்கு சித்தப்பா தன்னை தாக்கி விட்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக போலீசார் அவரை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு, ஷாஜி மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஷாஜி, தன்னை அண்ணன் ஆண்ட்ரோ தலையில் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.