குற்றம்

விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் ரெய்டு: ரூ.24 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்

விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் ரெய்டு: ரூ.24 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அந்தவகையில் புதுக்கோட்டை - 32 இடங்கள், திருச்சி - 4 இடங்கள், மதுரை -1 இடம், கோயம்புத்துார் -2 இடங்கள், காஞ்சிபுரம் -1 இடம் , செங்கல்பட்டு - 2 இடங்கள் மற்றும் சென்னை - 8 இடங்கள் சேர்த்து மொத்தம் 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பணம் ரூ .23,85,700, தங்க நகைகள் 4870 கிராம் (4.87 கிலோ), 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவரித்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், இவ்வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.23,82,700 மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் தகவல் அறிக்கையான அதில், ‘2013 - 21 வரை, அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் சொத்து விஜயபாஸ்கர் பெயரிலும், அவருடைய மனைவி பெயரிலும் குவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் பெயர்களில் ராசி புளூ மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹை பிரமோட்டர்ஸ், ஐரிஸ் எகோ பவர் வென்சர், ராசி எண்டர்பிரைசஸ், அன்யா எண்டர்பிரைசஸ் என்ற பெயர்களில் குடும்பத்தினர் பெயர்களில் நிறைய முதலீடு செய்யப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.6.42 கோடி என்றிருந்த சொத்துகள் அதுக்குப்பின் அதிகரித்தது.

அந்தவகையில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.58.64 கோடி என உயர்ந்துள்ளது. இதன் பின்னணியில் 7 லாரிகள், 1 ஜேசிபி எந்திரம், 10 கலவை இயந்திரங்கள் (ரூ. 6.58 கோடி); ரூ.53 லட்சம் மதிப்புமிக்க பி.எம்.டபிள்யூ கார்; ரூ.40 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகள்; ரூ.3.99 கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள்; சென்னையில் ரூ.14 கோடியில் வீடு; நிறுவனங்களில் ரூ.28 கோடி மதிப்பிலான முதலீடு என அவரின் சொத்துகள் அதிகரித்துள்ளது.

அவரின் மொத்த வருமானம் ரூ.57.77 கோடி என்றும், செலவு ரூ.34.51 கோடி என்றும் இருந்துள்ளது. அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு, ரூ.27.22 கோடியாக உள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.