மதுரை மாநகரில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 36 குழந்தைகளை மீட்டு, அவர்களின் கல்வியை மாவட்ட ஆட்சியர் உதவியுடன் உறுதி செய்துள்ளனர் மதுரை மாநகர காவல்துறையினர்.
மதுரை மாநகரில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், போக்குவரத்து சிக்னல்கள், கோவில்கள் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களை வைத்து நிறையபேர் யாசகம் எடுப்பதாக புகார் எழுந்திருந்தது. இது போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தைகள் நலக்குழு, மதுரை மாநகர காவல் துறை ஆகியோருக்கு இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின்பேரில், அனைவரும் இணைந்து மதுரை மாநகரில் நேற்று ஆய்வு செய்தனர். இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக யாசகம் செய்ய பயன்படுத்தப்பட்ட 19 பெண் குழந்தைகள், 17 ஆண் குழந்தைகள் என 36 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வைத்து யாசகம் செய்த 30 பேரை காவல்துறையினர் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட குழந்தைகள் அனைத்தும் யாசகம் செய்தவர்களுக்கு சொந்தமான குழந்தைதானா அல்லது சட்டவிரோதமாக திருடப்பட்டதா, அல்லது விலைக்கு வாங்கப்பட்டதா என்பது குறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டது. பின் இவர்களை சட்டவிரோதமாக பிச்சை எடுக்க வைப்பது யார் என்பது குறித்த விவரங்களையும் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்தி: மதுரையில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்பு
மீட்கப்பட்ட குழந்தைகளில் 7 குழந்தைகளுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த விதமான ஆவணங்கள் இல்லை என்பதும், மேலும் இரண்டு குழந்தைகள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் ஒன்பது குழந்தைகளின் பெற்றோர்கள் வீடு வசதி இல்லாமல் சாலையோரங்களில் வசித்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு காப்பகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 16 குழந்தைகளை அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் காப்பகத்தில் சேர்த்து பள்ளி படிப்பைத் தொடருவதற்கான ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
சாலைகளில் யாசகம் கேட்டதாக பிடிக்கப்பட்ட 36 குழந்தைகளின் பெற்றோருக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட 1500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரிடம் ‘எதிர்வரும் நாட்களில் சாலையோரங்களில் இதுபோன்று குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க மாட்டோம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்போம்’ என உறுதிமொழி பத்திரத்தில் உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது. உத்தரவாதம் அளித்த பின்னரே அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
- நாகேந்திரன்