குற்றம்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பழுதான கணினி விற்பனை-நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

ஆன்லைன் ஷாப்பிங்கில் பழுதான கணினி விற்பனை-நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

webteam

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பெற்ற மடிகணினி செயல்படாதநிலையில், மடிகணினியை மாற்றித்தராத விற்பனை நிறுவனத்திற்கு எதிராக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ரூ.32,999க்கு லினோவா நிறுவனத்தின் மடிகணினியை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய அன்றே மடிகணினி செயல்படாத நிலையில் உடனடியாக நவநீதகிருஷ்ணன் சம்மந்தப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், லினோவா சர்வீஸ் செண்டர் திருச்சி, அங்கீகரிக்கப்பட்ட லினோவா மடிகணினி விற்பனையாளர் பெங்களுர் ஆகியவற்றிக்கு புகார் தெரிவித்துள்ளார்.



ஆனால் அதற்கு சம்மந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து மடிகணினியை ஆய்வு செய்து மடிகணினி செயல்படாதநிலையில், அவருக்கு வேறு மடிகணினியை மாற்றிதராமல் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுசம்மந்தமாக நவநீதகிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழங்கு தொடர்ந்ததின் அடிப்படையில், வழக்கின் மனுவை விசாரித்த ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி, சேவை குறைபாடு மற்றும் மடிகணினியை ஆன்லைன் மூலம் வாங்கியவருக்கு மனஉளைச்சல், பொருள் நஷ்டம் ஏற்படுத்தியது போன்ற குற்றத்திற்காக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செயல்படாத மடிகணினியை திரும்பபெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட லினோவா நிறுவனம், இன்று முதல் ஆறுவார காலத்திற்குள் தரமான லினோவா மடிகணினியை புகார்தாரர் நவநீதிகிருஷ்ணனுக்கு வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.



மேலும் புகார்தாரை போன்று ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருள்களை வாங்கும் நுகர்வோர்கள், அதன் தரம் மற்றும் பொருளின் கோளாறு ஏற்பட்டு உபயோகிக்கமுடியாமல் ஏமாற வேண்டிய நிலை உள்ளதாக ஆணையம் கருதுவதால், இந்த வழக்கின் அடிப்படையில் எதிர்தரப்பினரை தண்டிக்கும் விதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.