குற்றம்

விருதுநகர்: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

விருதுநகர்: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

kaleelrahman

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யபட்ட 4 பேருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை  நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஹரிகரன் உட்பட 4 பேரை சிபிசிஐடி போலிPசார் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் கடந்த 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து ஹரிஹரன், ஜுனைத் அகமது,மாடசாமி, பிரவீன் ஆகிய நால்வரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நால்வரையும் ஆஜர்படுத்தினர். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் மே மாதம் 2 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து மதுரை மத்திய சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அழைத்து வந்த வாகனம் பழுதாகி நீதிமன்ற வளாகத்துக்குள் நின்ற நிலையில், நால்வரையும் அழைத்துச் செல்ல முடியாமல் காவல்துறையினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். இதற்கு முன்னதாக 15.4.22 அன்று மாவட்ட ஆட்சியர் குண்டாஸ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.