கோவையில் செல்போனில் பேசியபடி இருந்த மகளின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை பகுதியில் பெற்ற தாயே மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரமடையில் உள்ள கணுவாய்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நாகமணி (50). கூலி வேலை செய்து வரும் நாகமணியின் கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் நதியா என்கிற மகாலட்சுமிக்கு (30). திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நதியாவின் கணவர் சரவணக்குமார் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததுள்ளார். இதனால் நதியா தனது இரு குழந்தைகளுடன் தனது தாயார் நாகமணியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நதியா தனது குழந்தைகளை சரிவர கவனிக்காமல் அடிக்கடி யாருடனோ மணிக்கணக்கில் செல்போனில் பேசியபடி இருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த தாயார் தனது மகளை கண்டித்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் நதியா செல்போனில் பேசியபடி இருந்ததால் இருவருக்குமிடையே குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிந்து இருவரும் வீட்டினுள் படுத்துறங்க சென்ற நிலையில், தன் மகள்மீது இருந்த ஆத்திரம் அடங்காத தாய் நாகமணி தூங்கிக் கொன்றிருந்த நதியாவின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காரமடை காவல்நிலைய போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் நதியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்ததோடு குடி போதையில் மகளை கொன்ற தாய் நாகமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.