ரவுடி பேபி சூர்யாவின் யூ டியூப் சேனல்களை முடக்க கோவை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் சிக்கந்தர் ஆகியோர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா , சிக்கந்தர் ஆகியோரின் யூ டியூப் சேனல்களை முடக்க கோவை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, தொடர்ந்து சமுதாயத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் விதமாக வீடியோக்கள் வெளியிடும் யூடியூப் சேனல்க்ள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா கைது தொடர்பாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 31.12.2021 ம் தேதி புகார் அளித்த கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த புகார்தாரர் ஒரு YOUTUBE CHANNEL நடத்தி வந்துள்ளார். அதில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டெட் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்க அபிசியல் என்ற யூட்யூப் சேனல்களில் புகார்தாரரை பற்றி மிகவும் இழிவாகவும் ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும் இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கொண்டிருக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரைப் பெற்று கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை ஈட்டம் பிரிவுகள் 294(b), 354(A), 354(D), 509 109 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகள் 66(D). 67 IT ACT 2000 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் சட்டப்பிரிவு 4 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினியின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் 04.01.2022 ம் தேதி மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களை ஆய்வுக்காக கைப்பற்றியும் கைதிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடும் என்பதால் இவர்களது யூட்யூப் சேனல்களை மூடக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்று சமூக வலைதளத்தில் சமூக நலனையும் இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துகளையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களை பதிவிடுவோரின் சேனல்கள் மூடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார்.