செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியை சேர்ந்தவர் சுபா (36). இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (04.03.2024) மாலை இவரை காண ஆண் உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு என்றும் அங்கிருந்து வெளியேறும்படியும் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதனை பார்த்த நோயாளி சுபா இருவரையும் தடுக்க முயன்றுள்ளார். அப்போது மருத்துவர், சுபாவை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபா, தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர் விஷால் அளித்த புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில்... “நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை, மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர்தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கினேன்” என தெரிவித்தார்.
இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது... “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக் கூடாது. ஆனால், அந்த நபர் படுக்கையில் படுத்திருந்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” என்று கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி மருத்துவர் இடையே ஏற்பட்ட மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.