குற்றம்

சென்னை: வடமாநில இளைஞரை தாக்கி செல்போனை பறிப்பு - 3 மணிநேரத்தில் 4 பேரை கைது செய்த போலீஸ்

சென்னை: வடமாநில இளைஞரை தாக்கி செல்போனை பறிப்பு - 3 மணிநேரத்தில் 4 பேரை கைது செய்த போலீஸ்

kaleelrahman

சென்னையில் இளைஞரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை 3 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்னி ரெக்ஸ் (22). இவர் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தங்கி கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு ரெய்னி தனது பணிகளை முடித்துவிட்டு, சக பணியாளரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நௌபிங் நைத்னி (26) என்பவருடன் வசிப்பிடம் நோக்கிப் புறப்பட்டார்.

இந்நிலையில், அவர்கள் ஈ.வே.ரா பெரியார் சாலை மற்றும் புது ஆவடி சாலை இணைப்பு சாலை அருகே நடந்து வந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் ரெய்னியின் முகத்தில் தாக்க மற்ற மூவரும் அவரது விலையுயர்ந்த செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதைக் கண்ட தனியார் உணவக மேலாளர் பிரதீப், உடனடியாக செயல்பட்டு ரெய்னியைத் தாக்கிய நபரை மடக்கிப் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையிலான போலீசார், தாக்கப்பட்டு காயமடைந்த ரெய்னியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு அவரைத் தாக்கிய நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் கீழ்ப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்த அபிஷேக் (19) என்பதும், தனது கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (20), ராகேஷ் (20) மற்றும் கீழ்ப்பாக்கம் அழகப்பா நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி (21) ஆகியோருடன் சேர்ந்து ரெய்னி ரெக்ஸ் என்ற உணவக ஊழியரைத் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அபிஷேக் அளித்த தகவலின் பேரில் அடுத்த 3 மணி நேரத்தில் தப்பியோடிய அப்பாஸ், பார்த்தசாரதி மற்றும் ராகேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன மீட்டு, 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.