குற்றம்

சென்னை: ரூ 200 கோடி மோசடி வழக்கில் ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

சென்னை: ரூ 200 கோடி மோசடி வழக்கில் ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

kaleelrahman

சென்னை தனியார் நிறுவனத்தில் கடன் பத்திரம் வாயிலாக, 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் மூன்ஸ் டெக்னாலஜி லிமிடெட் என்ற பெயரில் செயல்படும் நிறுவனத்தில் நிர்வாகியாக ஜான் தீபக் இருந்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கில், 'மும்பையில் செயல்படும் ஐ.எல் அண்ட் எப்.எஸ் டிரான்ஸ்பர்ட்டேசன் நெட் ஒர்க்ஸ் இண்டியா லிமிடெட் என்ற நிறுவனத்தினர் கடன் பத்திரம் மூலம் 200 கோடி ரூபாய் பெற்றனர்.

இதற்கு, மாதம் 9 சதவீதம் வட்டி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹரி சங்கர், இயக்குனர் ராம்சந்த் கருணாகரன் ஆகியோர் வட்டியுடன் கடனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்து விட்டனர். இவர்கள் மீது தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த புகாரை விசாரித்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோர், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோர், 200 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது குறித்து, மஹாராஷ்டிர மாநில சிறைத்துறைக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதினர். பின்னர் மும்பை சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 26ம் தேதி ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோரை கைது செய்து, சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஐ.எல் அண்ட் எப்.எஸ் டிரான்ஸ்பர்ட்டேசன் நெட் ஒர்க்ஸ் இண்டியா லிமிடெட் முன்னாள் தலைவரான ரவி பார்த்தசாரதிக்கு அமலாக்கத்துறை தொடர்பான விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் ரவி பார்த்தசாரதி மும்பையில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரகாஷ் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் மும்பை சென்று ரவி பார்த்தசாரதியை கைது செய்து சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கைதான ரவி பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IL&FS Transportation Networks India Ltd (ITNL) நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

புகார் தெரிவிக்க EOW e-mail ID - dsp3eowhqrs@gmail.com மற்றும் டிஎஸ்பி பிரகாஷ் பாபு 9551133229, 9498109600 என்ற எண்ணையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

- ஆர்.சுப்ரமணியன்