ஏழு ஆண்டுகளில் சுமார் 7 கோடி ரூபாய் சொத்துக்களை முறைகேடாக குவித்த அரசு அதிகாரி பாண்டியன் மற்றும் அவரது மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 1.37 கோடி ரூபாய் ரொக்கம், 3 கிலோ தங்கம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடாக சொத்து குவித்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாண்டியன் மீது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், பாண்டியன் மீது 2-வது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதில் அவரது மனைவி லதாவையும் இணைத்துள்ளனர்.
2-வது முதல் தகவல் அறிக்கையில், 2013ஆம் ஆண்டு வரை பாண்டியனிடம் சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாகவும், அதன்பிறகு 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 7.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2013 முதல் 2020 வரை வருமானம் மூலம் 73 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், செலவு செய்த தொகை 1 கோடியே 90 லட்சம் ரூபாய் என 2-வது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2-வதாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக அந்த துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.