சென்னையில் மது பாட்டிலை மறைத்து வைத்ததாக ஆத்திரத்தில் அக்காவை குத்திக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த தாரகேஸ்வரி (55) என்பவர் சென்னை, வளசரவாக்கம், வேலன் நகர் 4வது தெருவில் வசித்து வந்தார். இலங்கையில் வசித்து வந்த இவரது தம்பி குகதாசன் (49), சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில், அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மலைக்கு சென்றுவிட்டு 15ஆம் தேதி மீண்டும் அக்கா வீட்டிற்கு திரும்பினார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அக்காவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று இரவு குடிப்பதற்காக 2 மதுபாட்டில்களை குகதாசன் வாங்கியுள்ளார். அதில் ஒன்றை குடித்து விட்டு மற்றொரு பாட்டிலை குடிப்பதற்காக வைத்திருந்துள்ளார். பின்னர் அதை தேடிய போது கிடைக்கவில்லை என தெரிகிறது. அந்த மது பாட்டிலை தனது அக்கா தாரகேஸ்வரிதான் மறைத்து வைத்துவிட்டார் என நினைத்து அவரிடம் குகதாசன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த குகதாசன் தனது அக்காவை கத்தியால் குத்தியிருக்கிறார். அத்துடன் தடுக்க வந்த அக்காவின் மகன் ஆதிசன் மற்றும் பாட்டி வேதநாயகி ஆகியோரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தாரகேஸ்வரி உயிரிழக்க, மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், குடிபோதையில் இருந்த குகதாசனை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த தாரகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.