அரியலூர் அருகே பள்ளி மாணவனை கொலை செய்ததாக 12-ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மதியழகன் - ஜெயலலிதா தம்பதியர். இவர்களுக்கு முருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், தந்தை மதியழகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாணந்திரையான்பட்டிணம் என்ற கிராமத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், மணிகண்டன் அரியலூரில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பொற்பதிந்தநல்லூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மாணவனின் தலையில் யாரோ கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். அடுத்த நாள் காலையில் (23 ஆம் தேதி) தெரியவந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அரியலூர் மாணவர் விடுதியில் உடன் தங்கியிருந்த 12-ஆம் வகுப்பு மாணவன் பாத்ரூமில் 9-ஆம் வகுப்பு மாணவனுடன் தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டதை பார்த்த மணிகண்டன் வார்டனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 12 ஆம் வகுப்பு மாணவன், மணிகண்டனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.