குற்றம்

ஆந்திரா டூ சென்னை: பேருந்து பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி திருடியதாக 2 பெண்கள் கைது

ஆந்திரா டூ சென்னை: பேருந்து பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி திருடியதாக 2 பெண்கள் கைது

kaleelrahman

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடியதாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேகர் (65) என்பவர் கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவிலிருந்து 27 சவரன் தங்க நகைகளை பாலீஷ் செய்வதற்காக பேருந்தில் சென்னை பிராட்வே வந்தார். பின்னர் பையை திறந்து பார்த்தபோது அவர், வைத்திருந்த 27 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. சேகர் அளித்த புகாரின் பேரில் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.


அதில், இரண்டு பெண்கள் பேருந்தில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து காட்சிகளில் பதிவான அடையாளங்களை வைத்து இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தீபா (32) மற்றும் நந்தினி (25) ஆகிய இருவரும் இணைந்து முதியவர்களின் கவனத்தை திசைதிருப்பி தமிழகம் முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

குறிப்பாக இருவரும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து கோயம்பேடு, பிராட்வே போன்ற பேருந்து நிலையங்களுக்குச் செல்வர். பின்னர் அங்கிருந்து கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் ஏறி முதியவர்களை குறிவைத்து 10, 20 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு, இது உங்களது பணமா என கேட்பர். அவர்கள் குனிந்து பணத்தை எடுக்கும்போது பிளேடு மூலம் பையை கிழித்து தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இவர்கள் கொள்ளையடித்த நகைகளை ஆந்திராவிற்கு எடுத்துச் சென்று உல்லாசமாக இருந்து விட்டு பணம் தீர்ந்தவுடன் மீண்டும் சென்னைக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்துகளில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி திருடியது தெரியவந்தது.

இவர்கள் மீது உடுமலை பேட்டை, அடையாறு, சிவகாஞ்சி என 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து 24 சவரன் தங்க நகைகளை எஸ்பிளனேடு போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.